*
புயல்
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கரைகடந்தப் புயலினால் வயல்வெளிகள் உருக்குலைந்து விட்டன.
. வீடு வாசல்கள் இழந்து மனித உயிர்கள் வாழ்வை இழந்து வெறுங்கையர்களாய் நிற்க வைத்துவிட்டது.
வெள்ளம். எங்கும் பெருவெள்ளம். கரைபுரண்டு ஓடும் தண்ணீர் வெள்ளம். மக்கள் முகங்களில்
தெம்பும் துயரமும் காணப்படுகின்றன. எத்தனையோ ஆண்டுகள் நீரைக்காணாத ஆறுகள் ஏரிகள் அணைகள்
குளம் குட்டைகள் எல்லாம் நீர் நிரம்பி வழிகின்றன.
பனிரெண்டு
ஆண்டுக்கொருமுறை வரும் மகாமகத் திருவிழா போன்று, ஆற்றங்கரையில் நின்று மக்கள் கூட்டம்
குடும்பம் குடும்பமாய் வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கிறது. கரையில் ஈரமண் மேட்டில் நின்றிருந்த
இரு சகோதரர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து நின்றிருந்தத் தருணம் மண்சரிந்தது. இருவரும்
தடுமாறி கீழே சாய்ந்தனர். சமாளித்தனர். உம்… ஏதும் முடியவில்லை. நீரில் தலைகவிழ்ந்தது
தான் தாமதம் வெள்ளநீர் இருவரையும் வேகமாய் இழுத்துக் கொண்டது. கரையில் வேடிக்கைப் பார்த்து
நின்றிருந்த மக்கள் செய்வதறியாது தவித்தனர். இருவர் உடல்களும் வேகவேகமாக அடித்துச்
செல்லப்படுகிறது. எல்லாரும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல் திகைத்து நின்று,
கதறி கதறி காப்பத்துங்க… காப்பாத்துங்க.. என்ற அழுகுரலின் ஓலங்கள் எங்கும் எதிரொலித்தன.
அச்சிறுவர்களின் உடல்களை நீர்ச்சுழற்சி இன்னும் வேகவேக இழுத்துச் செல்வதைப் பார்க்கப்
பார்க்க வேதனை தாங்கமுடியவில்லை. எத்தனை நொடி? எத்தனை நிமிடமிருக்கும்?. அத்தனை துரிதமான
அச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது. இப்பொழுது அவ்வுடல்கள் கண்ணுக்குக் கூட தெரியவில்லை.
அவ்வுடல்கள் எங்கேனும் கரை ஒதுங்கியிருக்குமா? எவரேனும் பார்த்துக் காப்பாற்றியிருப்பார்களா?
வெள்ளநீரில் இன்னும் எங்கேனும் மிதந்துப் போய்க் கொண்டிருக்குமா?
அச்சிறுவர்களின்
விதி நீரின் விளையாட்டாய் முடிந்து விட்டது.
பெற்றவர்கள் இன்னும் கரையைவிட்டு அகலவில்லை. அவர்கள் அழுது சிந்தும் கண்ணீர்மழை
வெள்ளநீரில் கலந்து பாய்கிறது. இன்னும் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டுதானிருக்கிறது.
புயல் கரையைக் கடந்துவிடும். ஆனால் எவர் ஆறுதலும் தேறுதலும் சொன்னாலும் நிவாரணம் கொடுத்தாலும்
அவர்களின் பாசம் கரைகடந்துவிடுமா? வாழ்வில்
நிம்மதிதான் கிட்டிவிடுமா?
*
No comments:
Post a Comment