மகாகவி
– பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில்
“
மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் )
நூலுக்கு ந.க. துறைவன் எழுதிய - “ ஆறு ஓவியங்களும்
ஆறு ஹைக்கூ கவிதைகளும் “ என்ற தலைப்பிலான விமர்சனக்
கட்டுரை வெளிவந்துள்ளது. மகாகவி – க்கும், நண்பர்.வதிலைக்கும் மிக்க நன்றி.
ந.க.துறைவன்.
*
ஆறு ஓவியங்களும்
ஆறு ஹைக்கூ கவிதைளும் …!!
நூல் விமர்சனம்.
:
மனிதர்கள் மனிதர்களை
நேசிப்பதை வி்ட, தனக்கு பிரியமான பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடம் அதிகமான பிரியம்
காட்டி வளர்கின்றார்கள். அவற்றில் நாய், பூனை, புறா, கிளிகள் ஆகியன முக்கியப் பங்கு
வகிக்கின்றன. இவைகள் மனிதர்களின் நேசிப்பிற்குரியனவாகத் திகழ்வதற்கான காரணங்கள் அனேகம்
உள்ளன. இவைகள் பெரும்பாலும் மனிதர்களின் செயல்பாடுகளோடு மிகவும் ஒத்துப் போகின்றத்
தன்மை வாய்ந்தனவாக இருக்கின்றன. எதிர்ப்புத் தன்மை என்பது இவைகளில் குறைந்துக் காணப்படுவதும்,
இதற்கான முக்கியக் காரணமாகத் தென்படுகின்றன. அதனோடு தாம் எப்படியெல்லாம் பிரியம் காட்டி
செல்லம் கொஞ்ச முடியுமோ? அவ்வாறெல்லாம் பழகி உறவுக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவைகளும்
தன்னுடைய ஆளுமைப் பண்புகளை வெளிப்படு்த்தி அன்பினைப் பெற்று நேசிப்பிற்குரிய பிரியமானவைகளாக
நடந்துக் கொள்கின்றன.
அவற்றுள் பூனைகள்
பெரும்பான்மையான வீடுகளில் செல்லப்பிராணி அனேகம்
பேர் வளர்க்கின்றார்கள். பூனையை ஏன் வளர்க்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கான பதில்
எனிமையாகவே இருக்கும். “ ஏதோவொன்றிடம் அன்புக் காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஏதோவொரு
விருப்பமான பிராணியை வளர்க்கின்றோம் ” என்றே பதில் கூறுவார்கள். பூனைகள் வளர்ப்பதற்கு
மிக எளிமையான பிராணி. அதுமட்டுமல்ல, அதன் சாந்தமான குணம், மெல்லியகுரல் வளம், அதிர்ந்து
நடக்காதத் தன்மை, பாதுகாப்பு உணர்வு, எதிரிகளை விரட்டும் வேகம், பயம் கொள்ளாமல் அருகில்
வந்து அமர்ந்து காட்டும் பாசம், இரைதேடும் லாவகம், என பல்வேறு குண இயல்புகளைக் கொண்டது
எனலாம்
பூனைகள் குறித்து, சிறுவர் பாடல்கள், சிறுவர்கதைகள், சித்திரக்கதைகள்,
நாட்டுப்பாடல்கள், பழமொழிகள், என அனேகப் படைப்புகளில் இடம் பெற்று வருகின்றன. ஹைக்கூ
கவிஞர்கள் பலரும் ஹைக்கூ படைத்தளித்துள்ளனர். சமீபத்தில் வெளிந்துள்ள வதிலைபிரபாவின்
” மெல்ல பதுங்கும் சாம்பல் நிறப்பூனை ” தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு ஓவியங்களும் ஆறு
ஹைக்கூ கவிதைகளும் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.
விடியல்பொழுதின்
வெண்மையான பனிப்டலம் மிக அழகானது. அந்நேரப் பனிக்குளிர் மனதுக்கும் உடலுக்கும் இதமானது
என்பார்கள். அந்தேரம் தான் பறவைகளும் விலங்குகளும் உற்சாகமாக எழுந்து குரல் எழுப்பி
மற்ற உயிரினங்களை எழுப்பி விடுகின்றன. எங்கேனும் ஒரு வீட்டிலிருந்துக் கொண்டோ அல்லது
வெளியிலிருந்துக் கொண்டோ பூனைகள் பலவும் குரல் எழுப்புகின்றன. அதனை
பூனையின் அலறலுக்கப்பால்
கம்பளிப் போர்வையாய்ப்
படருமிருள்
மெல்ல அவிழும்
விடியல்.
Beyond shrick
of a tom cat
Dark as a
woolen spread –
Brightening
dawn. – பக்கம் – 30 – அந்தப் பூனையின் அலறல் ஒலிக்கேட்டு, கம்பளிப் போர்வையாய்
படர்ந்திருக்கும் இருள் விலகி மெல்ல மெல்ல வெளிச்சம் பரவி அவிழ்கின்றன விடியல் என்று
மிக அழகான ஹைக்கூ கவிதையாக்கி படைத்துள்ளார் வதிலைபிரபா.
2.
பருவகாலம் தொடங்கியதும் மழையின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது
மக்களின் இயல்பான குணம். அம்மழைதான் மக்களின்
வாழ்வாதாரத்திற்கான உயிர்த்துளிகள். மழையை நம்பித்தான் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள்
காத்திருக்கின்றன. குடிநீர்ப் பிரச்சினைத் தீர்ப்பதற்கும் மழையின் எதிர்ப்பார்ப்பு
மிக அத்தியாவசமாக இருக்கின்றது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் மழை மாதங்களாகும்.
வடமேற்கு பருவமழை தொடங்கியது. வானம் மேகமூட்டமாகவே தெரிகின்றன. தீடீரென வெளியில்,
பெருமழை பெய்கிறது
மேஜையில் சூடான
தேனீரும் ரொட்டியும்….
“ மியாவ்.” பூனை.”
Down sleet –
With tea –
cup, hot & bread served
The cat”s “
mew “! – பக்கம் – 30 - மழைகுளிருக்கு அடக்கமாய்
வீட்டின் உள்ளே அறைக்குள் வீட்டார்களோ அல்லது உறவினர்களுடனோ மேஜையில் சூடான தேனீரும்
ரொட்டியும் காத்திருக்கின்றன. உரையாடல் நிகழ்கின்றதா என்றும் உணர முடியாத நிலை. ஆனாலும்,
அம்மேஜையின் கீழே அமர்ந்திருக்கும் பூனையின் “ மியாவ் ”…என்ற மெல்லிய குரல் அதன் பசியினை உணர்த்துகின்றது
இந்த ஹைக்கூ. ஜப்பானில் தேனீர் கலாச்சாரம் என்பது இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வரும்
பண்பாடாகக் கருதப்படுகின்றது ஜென்னில் தேனீர் ஒரு தியான நிலையாகவே போற்றப்பட்டு வருகிறது.
ஜென் ஹைக்கூக்கு இணையாக இந்த ஹைக்கூ படைக்கபட்டுள்ளது என்றே கூறலாம்.
.3.
பூனையின் உருவவமைப்பு,
அதன் கம்பீர்மான மீசை, நடை, மியாவ் என்ற மென்மையான குரல்வளம், உணவு தேடும் செயல்கள்,
வளர்க்கப்படும் மனிதர்களோடு கொள்ளும் ஆழ்ந்த நட்புணர்வு ஆகிய செயல்பாடுகள் அனைத்தும்
மனித இனத்திற்கான குறியீடுகளாகத் திகழ்கின்றன. இப்பூனைகளின் மீதான உள்தாக்கத்தைத் தன்
ஒவியப் படைப்புகளில் பல உருவமைப்புகளில் வரைந்துக் காட்டியுள்ளார் ஒவியர் பாஸ்கரன்.
அந்த ஒவியங்கள் மனிதஇனத்திற்கு ஏதோவொன்றைச் சுட்டி உணர்த்துகின்றன. இயற்கைக்கும் விலங்குகளுக்குமான
உறவு என்பதும் நெருக்கமானவையாகவே தெரிகின்றன. சூரியனின் வெப்பக்கதிர்கள் உயிர்வாழ்வினங்களுக்கான
ஆதாரசக்தியாகும். அவன் எப்படி மணித்துளிகள் தவறாமல் நகர்ந்து கடக்கின்றான் என்பதை,
பூனையாய் பதுங்கி
அந்திக்கப்பால்
நகர்கிறது
கறுப்பு இருட்டு.
Lurking as a
cat –
Beyond dusk
moves
Stark
darkness!. – பக்கம் – 53. - சூரியன் தன் ஒளிக்கதிர்களைப்
பரப்பி மெல்ல மெல்ல நகர்ந்து மாலைவேளையில் மேற்குவானில் தன் செந்நிறக் கதிர்களை வீசி
கருநிறமாகிய இருட்டினைப் போர்த்திக் கொண்டு பூனையாய்ப் பதுங்கி பதுங்கிச் செல்வதுப்
போன்று அந்திக்கப்பால் கவிழ்கின்றான். என்று மிக அற்புதமான மாலைக் காட்சியினைப் படம்
பிடித்துக் காட்டி ரசிக்க வைக்கின்றார்.. அந்திவேளை என்பது ஹைக்கூ கவிதைளில் முக்கிய
படிமங்களில் ஒன்றாகும்.
4.
வீடுகளில் வளரும்
பூனைகள் சற்று சாதுவாகக் காணப்பட்டாலும், வெளியில் தன்னிச்சையாக வளரும் பூனைகளின் அட்டகாசம்
சற்று கூடுதலாகவும் சுதந்திரமானவையாகவும் காணப்படுகின்றன. அவைகள் இரைதேடி வீடுகளில்
பால் தயிர் உணவுகளைத் திருடித் தின்பவையாகப் பெரும்பாலும் இருக்கின்றன. சிலநேரங்களில்
வீடுகளில் எலியின் தொல்லைகள் மிகுந்துக் காணப்படும். அப்பொழுது பூனைகள் அவற்றைப் பதுங்கிப்
பதுங்கிப் பாய்ந்து லாவகமாகப் பிடிக்கும். சில வீடுகளில் எலிப்பபொறி வைத்தும் எலிகளைப்
பிடிப்பார்கள். பூனையின் வருகையை உணர்ந்த எலிகள் மெல்ல பதுங்கத் துவங்கும். அச்செயலினைப்
பதுங்கும் எலி
மதில் மேல் பூனை
எலிப்பொறி.
Luurking rat…
Cat on the
mid wall…
The rat –
trap!. – பக்கம்.- 82. – பூனையின் மறுஉருவச் சாயலே புலிகள் என்று கூறுவார்கள். பூனை,
புலி, எலி இவை மூன்றும் பதுங்கிப் பாய்ந்திடும் குணம் படைத்தவைகளாகும். மேலும், பூனைகள்
குறித்தப் பழமொழிகள் பலவுண்டு. மனிதன் ஒரு செயலினை அப்படியும் இல்லாமல், இப்படியும்
இல்லாமல் சரியான முடிவினை எடுக்காதப் பட்சத்தில்
அவரின் குழப்பநிலையினை மதில் மேல் பூனைப் போன்று தடுமாறுகிறாயே? என்று சுட்டிக்காட்டுவார்கள்.
இப்படி பூனையின் பதுங்குதல், தடுமாற்றம், பொறிவலையில் சிக்கல் என மூன்று மனநிலைக் காரணிகளை முன்வைத்தும், சமூகத்தில்
மனிதனின் செயல்பாட்டோடும் இந்த ஹைக்கூவை ஒப்புநோக்கிப் பார்க்கலாம்.
5.
மனிதர்களிடையே
புழுங்கும் ஏராளமான மூடப்பழக்க வழக்கங்களில் சகுனம் பார்த்தல் என்பதும் ஒன்றாகும்.
எதற்குத் தான் சகுனம் பார்ப்பது என்கின்ற வரைமுறையில்லாமல் வரம்புமீறி செயல்பாட்டில்
இருக்கின்றது. பசு, சுமங்கலி, தயிர்க்காரி ஆகியோர் எதிரில் வந்தால் நல்ல சகுனம். விதவை,
கைராசியில்லாதவள், வாழாவெட்டிகள் ஆகியோர் எதிரே வந்தால் அபசகுனம். அதே போன்று பூனைக்
குறுக்கே வந்தால் அபசகுனம் என்பார்கள். அவன் தொழில் நிமித்தமாக வெளியே புறப்படுவதற்கு
சைக்கிளை எடுத்து தெருமுனையினைக் கடக்கும்போது, பூனை குறுக்கே திடீரென பாய்ந்து வருகின்றது.
அப்பொழுது, அவன் என்னடாயிது அபசகுனம் என நினைக்கிறான்? சற்றுநேரம் நின்று தண்ணீர் குடித்துவிட்டு
மீண்டும் புறப்பட யத்தனிக்கிறான் என்கின்ற காட்சினை,
பழைய சைக்கிளில்
தெருமுனை கடந்தவனின்
குறுக்கே
வருமவன் செல்லப்பூனை.
Before his
old cycle,
Passed the
street corner,
Crossing of his pet – cat!. – பக்கம் – 92. – மக்கள் நல்ல
செயல்கள், கெட்ட செயல்கள் அனைத்திற்கும் நேரம் காலம் சகுனம் பார்த்துத் தான் செய்து
வருகின்றார்கள். இதைப் பார்ப்பதில் பணக்காரன் ஏழை என்று எந்த பாகுபாடுமில்லை. அனைவருமே
இதில் சிக்குண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறார்கள். இம்மூடச்செயல்களை எதிர்த்தும
பல்வேறு இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும், இது தொடரவே செய்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகாலமாகச்
சடங்கு சம்பிரதாயங்கள், இம்மக்கள் மனங்களிலே ஊறிப்போய் இருக்கின்றன. இதிலிருந்து இன்னும்
விடுதலைப் பெற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ? தெரியவில்லை
இங்கு ‘ பழைய சைக்கிள்
‘ என்பது பழைமையான பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் குறிப்பனவாகும்.
’ குறுக்கே ‘ என்ற வார்த்தை மூடத்தனமானச் சகுனங்களைக் குறிப்பனவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
மனிதர்கள் சகுனம் பார்த்தல் என்கின்ற செயல்களைச் சைக்கிளின் இரு சக்கரங்கள் போன்று சுழன்றுக் கொண்டே இருக்கின்றன
என்று மிக யதார்த்தமாக, இந்த ஹைக்கூ வரிகளில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார் வதிலைபிரபா.
.
6.
இரவுக்கும்
பூனைகளுக்கும் ஏதோவொரு வகையில் நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.. பூனைகளுக்கு பகலி்ல்
கண் தெரியாது இரவில் தான் கண் தெரியும் என்று கூறுகிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மையென்பது
தெரியவில்லை. ஆனால், அவைகள் பகலை விட இரவில் தான் அதிகமாக உலாவி திரிகின்றன. இரைதேடுகின்றன.
உறவைத் தேடியலைகின்றன. அப்பொழுது அந்த இரவின் ஒளியில் மெல்லப் பதுங்கி பதுங்கி பாய்ந்து
தன் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்கின்றன. பூனைகளில் அவ்விரவுக் காட்சியினை,
ஒளிரும் இரவு
மெல்லப் பதுங்கும்
சாம்பல் நிறப்பூனை.
Silvery moon
–
At vicinity
slinks
An ash – hued
cat!. – பக்கம் – 118. – இ்ந்த ஹைக்கூ கவிதையில்,
ஒளிரும் இரவில் மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப்பூனை என்கின்றார். ஏன் மற்ற பூனைகள்
இரவு நேரங்களில் பதுங்கி தன் வேட்கையினைப்
பூர்த்திச் செய்துக் கொள்வதில்லையா? இருக்கலாம். ஆயினும், இச்சாம்பல் நிறப்பூனை ஏதோவொன்றின்
குறியீட்டு படிமமாகவே திகழ்கின்றது அது என்ன? மகாகவி பாரதியார் தன் பாப்பாப் பாட்டில்,
“ வெள்ளை நிறத்தொரு
பூனை
வீட்டில் வளர்வது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை; - அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி, - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஓரே தர
மன்றோ? ” – மகாகவி பாரதியார் கவிதைகள் – நூல் – பக்கம் – 233. .
பல்வேறு நிறங்களிலானப்
பூனைகளைக் காட்டி, இச்சமூகத்தில் நிலவும் நிறபேதங்களைச் சுட்டி, ,இவையாவும் ஒரே தரமென்கின்றார்.
சமூகத்தில் வாழும் மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரே வகையானவைகள் அல்ல. வெவ்வேறானவைகள்.
பாரதியார் சமூகநிலைப்பாட்டினைக் கூறுக்கின்றார். ஆனால், ஹைக்கூ கவிதைகள் மனிதர்களுடைய
மனவுணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியது. நிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் தொடர்புள்ளன
என்று கூறுகின்றது வண்ணமருத்துவ ( color therapy ) முறை. அவ்வகையில் பார்க்கும்போது, இச்சாம்பல் நிறப்பூனை,
கலவி உணர்வின்,. படிமமாக இருக்கலாமோ என்றும்
நினைக்கத் தோன்றுகின்றது?
7
எது கவிதை? என்ற
கேள்வி சங்கக் காலத்திலிருந்து இக் காலம் வரை விவாதப் பொருளாகவே பார்க்கப்பட்டு வருகின்றது..
அதற்கான காரணம் விவேகிகளுக்கே வெளிச்சம்.. தமிழில் புதுக்கவிதை தோன்றியபோதும் இதே நிலைதான்.
அது இன்றுவரையும் தொடர்கின்றது. அதன்பின்னர் ஹைக்கூ கவிதை எழுதத் தொடங்கிய காலம் தொட்டு
எது சரியான ஹைக்கூ? என்ற கேள்வி தொடர்ந்துக் கொண்டேயிருக்கின்றது.. எந்தவொரு படைப்பின்
உள்மையச் சரடைப் புரிந்தக் கொள்ளாமல் படைக்கப்பட்டால் இக்கேள்வி எழத்தான் செய்கின்றது.
இயற்கையின் ரகசியம், அறிவின் நுட்பம், வாழ்வின் சூட்சுமம், புரிதல், தேடல், தத்துவம் என்ற வார்த்தைகளின் பின்னணியில், படைப்பின்
ஆளுமைப் பண்புகள் தொடர்கின்றது. அப்படியென்றால், இங்கே,
எதுதான் ஹைக்கூ?
சலிப்புடன் அமர்ந்திருக்கிறான்
கோழி கூவுகிறது.
What”s a
haiku, then?
Sullen he”s
seated – there!
The cock”s
creech. – பக்கம் – 29. – என்கிறார். எந்தவொரு
கூட்டமென்றாலும், படைப்பாளிகள் சந்திப்பென்றாலும் இலக்கிய விவாதம் நிச்சியம் உண்டு
எனலாம். அப்படிப்பட்ட நிகழ்வொன்றில் தான் ஹைக்கூ விவாதம் தொடங்கியதோ என்னவோ? விடியவிடிய
பேசிப்பேசி சலிப்புற்ற பின்னரும் தொடர்கின்ற விவாதம் முற்றுபெறாமல் கோழி கூவுகின்றது.
பொழுதும் விடிகின்றது. இங்கொரு ஹைக்கூவும் பிறக்கின்றது. ஹைக்கூ என்பதே இயற்கைச் சார்ந்தவொரு
படைப்பாகும். பொழுது விடிவதும் பொழுது சாய்வதும் இயற்கையின் அன்றாடச் செயல்பாடாகும்
இஃதொரு உலகியல் சுழற்சி நெறியாகும். அதே போன்றதுதான் எல்லா படைப்பும் என்பதை உணர்த்துகின்றது..
*
“ மெல்லப் பதுங்கும்
சாம்பல் நிறப்பூனை ” யின் படைப்பாளியான நண்பர் வதிலைபிரபா, கடந்த இருபதாண்டுகளாக ஹைக்கூ
சார்ந்து எழுதி வரும் படைப்பாளி ஆவார்.. அவரின் ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும்
தனித்துவ மிக்கவையாகவே இருப்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. ஹைக்கூவின் கட்டமைப்பு வரம்புக்குள்ளேயே
இயங்குவதற்கு மெனக்கெடுபவர் என்பதையும் அறிவேன். அவரே தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார்.
“ நானும் ஹைக்கூவோடு
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு புள்ளியை நோக்கிய பயணமாய் இருந்தது. அந்தப் புள்ளி
முடிவற்ற புள்ளியாய் இருக்கிறது. பிரபஞ்சம் இணைகிற அல்லது பிரபஞ்சம் தாண்டிய ஒரு இலக்காய்
கூட இருக்கலாம்.” – பக்கம் – 20. - இந்தக் குரல் தான் ஹைக்கூ படைப்பாளியான வதிலைபிரபாவின்
நேர்மையான தொனி. மிகுந்த தரமான அச்சுவடிவமைப்பில் வெளி வந்துள்ள, இத்தொகுப்பு நூல்
ஹைக்கூ அரங்கில் பேசப்படும். கவனத்தைப் பெறும். பொழுது விடியும்போது கூட எங்கிருந்தேனுமொரு
“ மியாவ் ”என்ற பூனையின் இனிமையானக் குரல் கேட்கலாம்.
நல்வாழ்த்துக்களுடன்…
ந.க.துறைவன். வேலூர்.
632 009.
செல் ; 944 22
34 822.
தேதி ; 15-11-2016.
*