*
செம்பருத்திப்
பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக்
குருவிகள்.
பாதையில் போகும்
பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப்
போகிறார்கள்.
அப் பெண்களைப்
பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான்
வேகமாய்
கருப்புக் கண்ணாடி
அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம்
விற்கும்
தள்ளு வண்டிக்காரன்
குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள்
பெண்கள்.
காற்றில் பறந்து
போகிறது
வெயிலுக்குத் தலையில்
சுற்றியிருந்தக்
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில்
ஒதுங்கிய போது
மரத்திலிருந்து
விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது
காக்கை.
எதிரே கட்டியிருந்து
பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு
மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள்
ஒருத்தி்.
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச்
சொல்லி
ஏறி அமர்ந்துக்
கொண்டார்கள்
வாகனங்களைக் கடந்து
கடந்து
ஆட்டோ வேகமாய்
மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே
கோபமாய்
நெருப்பனலை வீசி
நகர்கிறான்
மேகங்களற்ற வானில்
சூரியன்…!!
*